பனிப்போரின் யுத்த களமாக உக்ரைன்! (பகுதி -5)

உக்ரைன் மறுபங்கீட்டிற்கான ஏகாதிபத்திய நாடுகளின் பனிப்போரை உள்நாட்டு போராக மாற்றி சோசலிசப் புரட்சியை முன்னெடுப்பதே உக்ரைன் விடுதலைக்கான ஒரே வழி!

பனிப்போரின்  யுத்த களமாக உக்ரைன்! (பகுதி -5)

(பகுதி – 4 ன் தொடர்ச்சி) 

 

உக்ரைன் போரின் வர்க்கத் தன்மை என்ன?

உக்ரைன் போர் அமெரிக்க நேட்டோ மற்றும் ரசிய ஏகாதிபத்தியங்களின் ஏகபோக நிதியாதிக்க கும்பல்களின் நலன்களிலிருந்தும், உக்ரைன் பெருமுதலாளிகளின் நலன்களிலிருந்தும் நடத்தப்படும் அநீதி யுத்தமாகும்.

உக்ரைனின் ஜெலன்ஸ்கி ஆட்சியைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி அமெரிக்க நேட்டோ முகாம் ஒரு பதிலிப் போரை நடத்துகிறது. ரசியா நேரடி யுத்தம் நடத்துகிறது. ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான இந்த பனிப்போரில் ரேதியான் - லாக்கீடு மார்ட்டின் போன்ற அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் நலன்களும், யுனிபெர்-விண்டெர்ஸெல் போன்ற ஐரோப்பிய கார்ப்பரேட்டுகளின் நலன்களும், காஜ்ப்ரோம் -நார்ட் ஸ்ட்ரீம், ரோஸ்டெக் உள்ளிட்ட ரசிய கார்ப்பரேட் நலன்களும் அடங்கியுள்ளன. உக்ரைன் அரசு தனது பெருமுதலாளிகளின் நலன்களிலிருந்து அமெரிக்க -நேட்டோவின் சார்பில் யுத்தத்தில் ஈடுபடுகிறது. சீனா தனது ஏகாதிபத்திய நலன்களிலிருந்து ரசியாவின் யுத்தத்தை ஆதரிக்கிறது. ஆகவே, இருதரப்பிலும் வர்க்க நலன்கள் ஒன்றாகவே உள்ளன.

ஆகவே, இந்த போர் ஏகாதிபத்திய நாடுகள் உக்ரைனை மறுபங்கீடு செய்வதற்காகவும் அதன் மூலம் கிழக்கு ஐரோப்பிய மேலாதிக்கத்தை நிலைநாட்டவும் நடத்தும் அநீதியான போர் ஆகும். இதில் பாட்டாளி வர்க்க நலன்களோ, மக்களின் நலன்களோ துளியுமில்லை. ஆகவே இந்த அநீதியான கொள்ளைக்கார போரில் எந்தவொரு தரப்பையும் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க முடியாது. அவ்வாறு ஆதரிப்பது பாட்டாளி வர்க்கத்துக்குச் செய்யும் அப்பட்டமான துரோகம் ஆகும். இரு ஏகாதிபத்திய முகாம்கள் மற்றும் உக்ரைன் ஆளும் வர்க்கங்களை எதிர்த்து ஒரு தேசியப் போரை துவங்கவும், அநீதி யுத்தத்தை நீதி யுத்தமாக - உள்நாட்டு யுத்தமாக மாற்றி சோசலிசப் போரை முன்னெடுக்கவும் நாம் உக்ரைன் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். இதுவே லெனினிய அணுகுமுறையாகும்.

எனவே உக்ரைன் போரில் அமெரிக்க நேட்டோ மற்றும் அதன் எடுபிடியான உக்ரைன் ஆளும் வர்க்க ஜெலன்ஸ்கி அரசிற்கு ஆதரவு தருவதும், ரசிய ஏகாதிபத்திய ஆதரவு நிலை எடுப்பதும் உக்ரைன் உழைக்கும் வர்க்கத்திற்கு மட்டுமின்றி உலகப் பாட்டாளி வர்க்கத்திற்கும் செய்யும் அப்பட்டமான துரோகமாகும்.

ஆனால் திருத்தல்வாதிகள் ரசிய ஏகாதிபத்திய வெறி நாய்களின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை வெட்கக் கேடான முறையில் ஆதரிக்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்ன?

1.  உக்ரைனை நேட்டோவில் இணைப்பது ரசியாவின் பாதுகாப்பிற்கும் எல்லை இறையாண்மைக்கும் விடப்படும் அச்சுறுத்தல்; இதன்மூலம் ரசியாவை அமெரிக்காவே போருக்கு தூண்டுகிறது.

2. ரசியாவின் போர் தற்காப்புப் போர்; உக்ரைனில் ஜெலன்ஸ்கியின் நாஜி வகைப்பட்ட பாசிச ஆட்சியை அகற்றுவதற்கான ஜனநாயகப் போர் என புதின் சொல்வது சரியானது.

3.  இது அமெரிக்காவின் ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தை வீழ்த்தி ரசிய-சீனாவின் பல்துருவ ஒழுங்கமைப்பை நிறுவுவதற்கான நீதிப் போர். ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தை விட பல்துருவ மேலாதிக்கம் மேலானது; சரியானது.

4.  ரசியா பல்துருவ ஒழுங்கமைப்புக்காக போராடுவது சோசலிசத்திற்கு வழிவகுக்கும்; உக்ரைன் உள்ளிட்ட முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளை இணைத்து மீண்டும் சோசலிச குடியரசை நிறுவுவதற்கு புதின் போரிடுகிறார்.

5.  அமெரிக்காவே முதன்மையான போர்க்குற்றவாளி. அது மட்டுமே அநீதி யுத்தங்களை நடத்துகிறது.

6.  டோன்பாஸ், கிரீமியா இரண்டும் ரசியாவிற்கு சொந்தமானது. இந்தப் போர் அக்குடியரசுகளின் இறையாண்மைக்காக ரசியாவால் நடத்தப்படும் போர்.

மேற்கண்ட வாதங்களில் மா-லெ அடிப்படை ஏதும் உள்ளதா? நிச்சயம் இல்லை. இது குறித்துப் பார்ப்போம்.

ஏகாதிபத்திய ரசியாவை சோசலிச நாடு என்று சொல்லி அதன் அநீதி யுத்தத்தை ஆதரிப்பது மறைமுகமான திருத்தல்வாதம் ஆகும். ரசியா ஒரு ஏகாதிபத்திய நாடு என்று சொல்லிக்கொண்டே அதன் அநீதி யுத்தத்தை ஆதரிப்பது வெளிப்படையான திருத்தல்வாதம் ஆகும்.

இந்த இருவகை திருத்தல்வாதிகளும் ஏகாதிபத்திய ரசியாவை சோசலிச ரசியா என்று சொல்லி அமெரிக்க-நேட்டோ செய்யும் சோசலிச எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு சேவை செய்கிறார்கள். சோசலிசத்திற்கு துரோகம் இழைக்கிறார்கள்.

காலனியாதிக்கம் முற்றுப் பெற்றுவிட்டது, இனி யுத்தமே இல்லை, அமைதி வழி சோசலிசம் என்ற குருசேவின் நவீன திருத்தல்வாதத்தை ஏற்றுக் கொண்ட இந்திய வாரிசுகளான இடது வலது போலி கம்யூனிஸ்ட்டுகள் அல்லது திருத்தல்வாதிகள், இன்று உக்ரைன் மீதான ரசியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஆதரிப்பதற்குச் சிறிதும் கூச்சப்படவில்லை. சோவியத் சமூக ஏகாதிபத்தியம் ஆப்கான் மீது ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்திய போது, சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியான பிடல் காஸ்ட்ரோவும் இந்திரா காந்தியும் அதை ஆதரித்தார்கள். அவர்களின் மனதின் குரலாக இருந்து போலி கம்யூனிஸ்ட்டுகளும் அதை ஆதரித்தார்கள். தற்போது ரசியாவின் போரை மறைமுகமாக ஆதரிக்கும் பாசிச மோடி ஆட்சியின் நிலைப்பாட்டுடன் ஒரே புள்ளியில் ஒன்றுபடுகிறார்கள்.

அமெரிக்கா ஒற்றை துருவ மேலாதிக்கத்தை நோக்கமாகக் கொண்ட நாடு; அமெரிக்காவே முதலில் யுத்தத்தைத் துவக்கி ரசியாவை போருக்குத் தூண்டுகிறது; ரசியா தனது தற்காப்பிற்காகப் போர் நடத்துகிறது; எனவே ரசியாவின் போரை ஆதரிக்க வேண்டும் எனத் திருத்தல்வாதிகள் கூறுகிறார்கள். முதல் உலகப்போரின் போது காவுத்ஸ்கியும் டிராட்ஸ்கியும் இரண்டாம் அகிலத்து சந்தர்ப்பவாதிகளும் லெனினியத்திற்கு எதிராக முன்வைத்த அதே வாதங்கள்தான் இவை. அவர்கள் முதல் உலகப்போரின் போது, பிரிட்டன்தான் உலக மேலாதிக்கவாதி; உலகின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து வைத்துள்ள நாடு; அதுவே போரை முதலில் துவக்கி ஜெர்மனியை போருக்குத் தூண்டுகிறது; ஜெர்மன் ஏகாதிபத்தியம் தன் தாய்நாட்டை பாதுகாக்கப் போரில் ஈடுபடுகிறது; எனவே ஜெர்மனின் தற்காப்பு போரை ஆதரிக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். லெனின் அவர்களை ஏகாதிபத்திய அடிவருடிகள்; சமூக தேசிய வெறியர்கள் எனக் கடுமையாகச் சாடினார். அவர்கள் பேசுவது 1912 பாசில் தீர்மானத்திற்கு எதிரானது என்றார். அது குறித்து லெனின் பின்வருமாறு கூறினார் :

"இந்த போர் இன்று நடைபெற்று வரும் போரும் ஒரு ஏகாதிபத்திய போர் என்பது அனேகமாக அனைத்து இடங்களிலும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. எனினும் பெரும்பாலான இடங்களிலும் இந்த சொல்லின் பொருள் திரிக்கப்படுகிறது. அல்லது ஒரு பிரிவிற்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அல்லது ஒரு சிறிய இடைவெளி விடப்படுகிறது. இந்தப் போரானது கடைசியில் பார்க்கும்போது முதலாளித்துவ முற்போக்குத் தன்மை உடையதாய் இருக்கக்கூடும். தேசிய விடுதலை இயக்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கக்கூடும் எனக் கூறுவதற்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு சின்ன இடைவெளி விடப்படுகிறது" (சோசலிசமும் போரும் பக்கம் 12-13)

லெனின் சொல்வது போன்று அமெரிக்க-ரசிய ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையில் நடக்கும் அநீதிப் போரில், ஒரு தரப்பிற்கு அதாவது அமெரிக்காவிற்கு மட்டும் பொருத்தி, ரசியாவிற்கு விலக்கு அளித்து அதற்கு சோசலிச ஒப்பனை அல்லது முற்போக்கு முகமூடி திருத்தல்வாதிகளால் தரப்படுகிறது. ரசியாவின் யுத்தத்தில் முற்போக்குத் தன்மை வாய்ந்த அம்சம் உள்ளது என்று கூறி திருத்தல்வாதிகள் ரசியாவிற்கு காவடி தூக்குகிறார்கள்.

மேலும் லெனின் கூறுவதாவது :

"நூறு அடிமைகளைக் கொண்ட ஒரு அடிமை உடையோன், 200 அடிமைகளைக் கொண்ட மற்றொரு அடிமை உடையோனுடன், இந்த அடிமைகளைச் சற்றே 'நியாயமான' வகையில் மறு பங்கீடு செய்து கொள்வதற்கு என்று போரிடுவதாக நினைத்துப் பாருங்கள். அத்தகைய போர் விஷயத்தில் 'தற்காப்புப் போர்', 'தாய்நாட்டைக் காப்பதற்கான போர்' என்று வர்ணிக்கும் வாக்கியமானது வரலாற்றியல் முறையில் கலப்படமற்ற அப்பட்டமான பொய்யாகும். . . . . இந்த வகையில்தான் தேசியக் கருத்தியல்களாலும் 'தாய் நாட்டை காப்பதற்கான போர்' என்ற சொற்றொடராலும் மக்கள் ஏகாதிபத்திய வாதிகளால் ஏமாற்றப் படுகிறார்கள்". (சோசலிசமும் போரும், பக்கம் 13)

"ஜெர்மனியானது தேசங்களின் விடுதலைக்காகப் போராடவில்லை. அவற்றை (தானும்) ஒடுக்குவதற்காக போராடுகிறது. சோசலிஸ்ட்டுகளுடைய பணி இளமைப் பருவத்துக் கொள்ளைக்காரனை - வலிமையான கொள்ளைக்காரனை ஆதரித்து (ஜெர்மனி), வயிறு வீங்கும் வகையில் கொள்ளையடித்துக் கொட்டிக் கொண்ட முதிய கொள்ளைக்காரனை (பிரிட்டன்) ஆதரித்து, அவர்கள் கொள்ளையடிக்க உதவுவது அல்ல. கொள்ளைக்காரர்களுக்கு இடையில் நடக்கும் போராட்டத்தை சோசலிஸ்ட்டுகள் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் அனைவரையும் வீழ்த்தவேண்டும். " (சோசலிசமும் போரும், பக்கம்-18)

ஆகவே, 200 காலனிகள் உடையோன் - மூத்த கொள்ளையன் (அமெரிக்கா), 100 காலனிகள் உடையோன் - இளைய கொள்ளையன் (ரசியா) என வகைப்படுத்தி மூத்த கொள்ளையனை எதிர்த்து இளைய கொள்ளையனை ஆதரித்து, இளைய கொள்ளையனின் அநீதிப் போரை தாய்நாட்டு பாதுகாப்பு - தற்காப்பு போர் எனும் பெயர்களில் ஆதரிப்பது காவுத்ஸ்கியவாதம் என்று லெனின் கூறுகிறார். ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடக்கும் போர் எப்போதும் அநீதிப் போர்தான்; அதில் தற்காப்பு போர் அல்லது தாய் நாட்டுப் பாதுகாப்பு போர் எனும் முழக்கத்தை ஆதரிப்பது சமூக தேசிய வெறி மற்றும் ஏகாதிபத்திய அடிவருடித்தனம் எனும் அடிப்படை லெனினியத்திற்கு திருத்தல்வாதிகள் துரோகமிழைத்து காவுத்ஸ்கியின் வாரிசுகளாக நிற்கிறார்கள். புதினின் மாருஷ்ய பெருந்தேசியவெறிப் பாசிசத்திற்கு வால் பிடிக்கிறார்கள்.

பிரிட்டன்தான் முதலில் போரை துவக்கி ஜெர்மனியைப் போருக்குத் தூண்டுகிறது என காவுத்ஸ்கியர்கள் கூறியதற்கு, லெனின் இரண்டு தரப்பில் யார் யுத்தத்தை முதலில் துவக்கியது எனப் பார்ப்பது தவறு என்கிறார்.

லெனின் கூறுவதாவது :

"இரண்டு கொள்ளையர்களில் எந்த கொள்ளையன் முதலில் கத்தியைத் தூக்கினான் என்பது பற்றி எனக்கு அக்கறையில்லை" (போரும் புரட்சியும் -லெனின் LCV 24 p 398-421)

"போரில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற இரு தரப்பு நாடுகளும் இன்று நடைபெற்று வரும் யுத்தத்திற்காகத் திட்டமிட்ட வகையில் தயாரிப்புச் செய்து கொண்டிருந்தனஞ் இவற்றில் எந்த கோஷ்டியினர் இராணுவ ரீதியாக முதல் தாக்குதலைத் தொடுத்தனர் அல்லது முதல் யுத்த அறிவிப்பைச் செய்தனர் என்பது சோசலிஸ்ட்டுகளின் செயல்தந்திரத்தை நிர்ணயிப்பதில் எவ்வகையிலும் சம்பந்தமில்லாதது. தாய்நாட்டைக் காப்போம், எதிரியின் படையெடுப்பை எதிர்ப்போம், தற்காப்புக்காக யுத்தம் என்றவை போன்ற இருதரப்புச் சொற்களுமே மக்களை ஏமாற்றுவதற்காகச் சொல்லப்படுவனவே தவிர வேறில்லை" (பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம், லெனின் - பக்கம் 171)

அமெரிக்கா, ரசியா இரண்டுமே உக்ரைன் போருக்குத் தயாரித்து வந்தன. இதில் அமெரிக்காதான் ரசியாவைப் போருக்குத் தூண்டியது எனவும், ரசியாவின் போர் தற்காப்பு போர் எனவும் திருத்தல்வாதிகள் கூறுவது லெனின் கூறியவாறு மக்களை ஏமாற்றவே. அது சோசலிஸ்ட்டுகளின் செயல்தந்திரத்தை நிர்ணயிப்பதில் எவ்வகையிலும் சம்பந்தமில்லாதது.

ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான அநீதிப் போரில் தாய்நாட்டுப் பாதுகாப்பு - தற்காப்பு போர் எனும் முழக்கம் காவுத்ஸ்கியவாதம் எனக் கூறிய லெனின், இரு ஏகாதிபத்திய முகாம்களையும் ஒரே நேரத்தில் வீழ்த்தி அவற்றின் அநீதிப் போரை நீதிப் போராக - உள் நாட்டுப் போராக - சோசலிசப் போராக மாற்றுவதே பாட்டாளி வர்க்கத்தின் செயல்தந்திரம் என பின்வருமாறு கூறுகிறார் :

"பாசில் தீர்மானமானது ஸ்டுட்கார்ட் தீர்மானத்தின் வாசகத்தை மீண்டும் எடுத்துரைக்கின்றது. ஒரு போர் ஏற்படுமானால் அந்த போர் விளைவிக்கக் கூடிய பொருளாதார அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதலாளித்துவத்தின் வீழ்ச்சியைத் துரிதப்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - அதாவது போர்க்காலத்தில் அரசாங்கங்களுக்கு ஏற்படும் தொல்லைகளையும் இடர்பாடுகளையும் பாமர மக்களது சினத்தையும் சோசலிசப் புரட்சியை முன்னெடுத்துப் போவதற்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். " (சோசலிசமும் போரும், பக்கம் 26)

"அனைத்து நாடுகளிலுள்ள முதலாளித்துவவாதிகளும் தம்முடைய கொள்ளையடிக்கும் குறிக்கோளைத் தேசியம் எனும் கருத்தியல் கொண்டு மறைத்து வைப்பதற்கெனக் கூறும் வெட்கமற்ற பொய் புளுகுகள், புரட்சி நடத்த வேண்டும் எனும் உளபாங்கினை தவிர்க்க முடியாதபடி பாமர மக்களிடையே உருவாக்கி வருகிறது. இந்த உளப்பாங்கினை பாமர மக்களும் உணரும்படி செய்வது நமது கடமை. அவற்றை ஆழப் பதிந்தவையாக செய்வதும் அவற்றிற்கு ஒரு உருவம் தருவதும் நமது கடமை. ஏகாதிபத்திய போர்களை உள்நாட்டுப் போராக மாற்றுவோம் எனும் முழக்கத்தில்தான் இந்தப் பணியானது சரியானபடி வெளியிடப்படுகின்றது" (சோசலிசமும் போரும், பக்கம் 36- 37) (அழுத்தம் நம்முடையது)

எனவே, ஏகாதிபத்திய யுத்தம் எப்போதும், யார் முதலில் தொடங்கினாலும் அது அநீதி யுத்தமே என்றும் அதை உள்நாட்டு யுத்தமாக மாற்ற வேண்டும் என்று லெனின் கூறுகிறார்.

ஏகாதிபத்திய முரண்பாடுகளைப் பயன்படுத்துவது என்பது ஒரு ஏகாதிபத்தியத்தை ஆதரிப்பதல்ல. மாறாக அந்த சூழலைப் பயன்படுத்தி ஏகாதிபத்தியப் போரை உள் நாட்டுப் போராக மாற்றுவதே லெனினியம் ஆகும். அதாவது ஏகாதிபத்தியங்களின் போரால் ஏற்படும் அவற்றின் பலவீனம்; யுத்த எதிர்ப்பு இயக்கங்கள் எழுச்சி பெறுதல்; இவற்றைப் பயன்படுத்தி உள்நாட்டு யுத்தம் அல்லது நீதி யுத்தம் தொடங்குவதே என்று லெனினியம் வழிகாட்டுகிறது. ஏகாதிபத்திய போரில் புரட்சிகர வர்க்கம் சொந்த நாட்டின் தோல்வியைத்தான் விரும்பும் என்கிறார் லெனின்.

சோசலிச முகாம் உருவாகாத சூழலில் லெனின் முன்வைத்த இந்த சர்வதேசிய செயல்தந்திரமே இன்று பொருந்தக் கூடியதாகும். முதல் உலகப் போருக்குப் பின்பு சோசலிச முகாம்களைக் காப்பாற்றும் பொருட்டு லெனின், ஸ்டாலின், மாவோ ஆகிய மார்க்சிய ஆசான்கள் பின்பற்றிய மா-லெ செயல்தந்திரங்களை, சோசலிச முகாம் இல்லாத அதாவது பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு இல்லாத இன்றைய சூழலுக்குப் பித்தலாட்டமாக பொருத்தி ஒரு ஏகாதிபத்திய முகாமை ஆதரிப்பது லெனினியத்திற்கு எதிரானதாகும். மீண்டும் சோசலிச நாடு உருவாகும் போது அதற்கேற்ப லெனினிய செயல்தந்திரம் வகுக்கப்படவேண்டும்.

இது குறித்து ஏ.எம்.கே கூறுவதாவது :

"ஏகாதிபத்தியங்களின் முரண்பாட்டை சோசலிச நாடு இருந்தால்தான் பயன்படுத்த முடியும். சோசலிச நாடு இல்லாவிட்டால் போரில் ஒரு ஏகாதிபத்திய அணியின் முரண்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டு இன்னொரு ஏகாதிபத்திய அணியுடன் கூட்டு என்பது சாத்தியமில்லை. சோசலிச நாடு இல்லாவிட்டாலும் இன்னொரு ஏகாதிபத்திய அணியுடன் சேர முடியும் என்று கூறினால் அது மிகப்பெரிய விலகலாகத்தான் இருக்க முடியும்" (சர்வதேச அரசியல் பொது வழியைத் தீர்மானிப்பது குறித்து ஓர் அறிமுகம், ஏ.எம்.கே, பக்கம் 61-62)

மேலும் திருத்தல்வாதிகள் ஏகாதிபத்திய முரண்பாடுகள் மற்றும் ஆளும் வர்க்க முரண்பாடுகள் மறைமுக சேமிப்பு சக்திகள் எனும் லெனினியத்தின் அரிச்சுவடியை மறந்துவிட்டார்கள் அல்லது மூடி மறைக்கிறார்கள். அவர்கள் எப்போதும் அவற்றை நேரடி சேமிப்பு சக்திகளாகவே கருதி வந்துள்ளார்கள்.

"நேரடி, மறைமுக சேமிப்பு சக்திகளை முறையாகக் கையாளுகிற பிரச்சினையானது ஒரு முக்கியமான பிரச்சினையாகும். இதன் மீதுதான் இந்தியப் பொதுவுடைமை இயக்கமானது மீண்டும் மீண்டும் திசை விலகியது. அது பல சமயங்களில் மறைமுகச் சேமிப்பு சக்திகளை நேரடி சேமிப்புச் சக்திகளாக எடுத்துக் குழப்பியது". இந்தியப் புரட்சியின் போர்த்தந்திரம் செயல்தந்திரம், பக்கம் 134-135)

எனவே, ஏகாதிபத்திய முரண்பாடுகளை (அமெரிக்க மற்றும் ரசிய-சீன முரண்பாடுகளை) நேரடி சேமிப்புச் சக்திகளாகக் கருதிக்கொண்டு ஒரு ஏகாதிபத்திய நாட்டை ஆதரிப்பது மார்க்சியம் அல்ல. அது போலவே ஆளும் வர்க்க முரண்பாடுகளை (காங்கிரஸ், பாஜக முரண்பாடுகளை) நேரடி சேமிப்பு சக்திகளாக கருதி அவற்றை ஆதரிப்பதும் காங்கிரஸ், திமுக போன்ற ஆளும் வர்க்கங்களுக்கு முட்டுக் கொடுப்பதும் மார்க்சியம் அல்ல.

ஏகாதிபத்திய போரை எவ்வாறு முடிவிற்குக் கொண்டுவருவது? ஏகாதிபத்தியங்கள் தொடங்கி வைத்த போரை ஏகாதிபத்தியங்களே முடித்துவைப்பார்கள் என்று கருதி, போர் வேண்டாம் சமாதானம் தேவை என சமாதானவாதிகளும் திருத்தல்வாதிகளும் பேசுகிறார்கள். ஏகாதிபத்தியப் போரின் வர்க்கத் தன்மையை மூடிமறைக்கிறார்கள். ஏகாதிபத்தியப் போரைப் பாட்டாளி வர்க்கப் போர் மூலம் முடிவிற்குக் கொண்டு வரமுடியும் எனும் கண்ணோட்டம் இல்லாதவர்கள் என்கிறார் லெனின். ரசியாவில் ஜார் ஆட்சியைப் பாட்டாளி வர்க்கப் புரட்சியே தூக்கியெறிந்து அமைதியை நிலை நாட்டியது என்கிறார் . வர்க்கங்கள் இல்லாத சமூகத்தில்தான் போரும் இல்லாமல் போகும். (போரும் புரட்சியும், லெனின் - LCV 24 398-421)

 

(தொடர்ச்சி பகுதி -6 ல்)